Friday, December 16, 2011

First Female Editor in Tamil Cinema.!!!


My interview on magazines.. தமிழ் சினிமாவின் முதல் பெண் படத்தொகுப்பாளர்!


தமிழ் சினிமாவின் முதல் பெண் படத்தொகுப்பாளர்!

இயக்குநர் பாரதிராஜாவின் ஆஸ்தான படத்தொகுப்பாளரும், "வேதம் புதிது' படத்திற்கு தேசிய விருது வாங்கியவருமான பி. மோகன்ராஜிடம் உதவி படத்தொகுப்பாளராகப் பணிபுரிந்தவர் கிருத்திகா. சென்னை-தரமணி திரைப்படக் கல்லூரியில் "படத்தொகுப்பு' பிரிவு மாணவியான இவர், சமீபத்தில் "உயிரின் எடை 21 அயிரி' படத்தின் மூலமாக முதல் பெண் படத்தொகுப்பாளராக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்.படத்தொகுப்பாளராக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்பட்டிருக்கிறீர்கள். அது பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்...1999-ம் ஆண்டு திரைப்படக் கல்லூரியிலிருந்து வெளியே வந்ததும் படத்தொகுப்பாளராக சினிமாவில் அடையாளம் காணப்பட வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டேன். என்னுடைய முயற்சிக்கு முதல் வெற்றி வாய்ப்பாக ஒரு தனியார் தொலைக்காட்சியில் படத்தொகுப்பாளராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் என்னுடைய பத்து வருட கனவு இப்போதுதான் நிறைவேறியிருக்கிறது. கல்லூரியில் படித்த காலங்களில் என்னுடைய துறைப் பேராசிரியர், ""இந்தத் தொழில்நுட்பத்தைப் படித்துவிட்டு பெரும்பாலும் தொலைக்காட்சியில்தான் பெண்கள் பணியாற்றுகிறார்கள். நீங்கள் தொலைக்காட்சியோடு, சினிமாவிலும் பணியாற்ற வேண்டும். அதைத்தான் ஒரு பேராசிரியராக நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்'' என்று சொன்னார். அவருடைய கனவை நான் இப்போது நிறைவேற்றியிருப்பதாக நினைக்கிறேன். கல்லூரியில் பயிலும்போது படத்தொகுப்பில் எந்த மாதிரியான மென்பொருளை பயன்படுத்தினீர்கள்?"மூவியாலா ஸ்டீரிம்பேக்'ல்தான் படத்தொகுப்பைக் கற்றுக்கொண்டேன். ஆனால், கல்லூரியில் இறுதியாண்டில்தான் "நான் லீனியர் எடிட்டிங்' வந்தது. அப்போது அந்த மென்பொருளை எங்கள் கல்லூரியில் படிக்கும் வசதியில்லாமல் இருந்தது. ஆனால், "மூவியாலா'வில் படத்தொகுப்பை கற்றுக்கொள்வதற்குண்டான அனைத்து வசதிகளும் எங்கள் கல்லூரியில் கிடைத்தது. ஏறக்குறைய ஒரு மாணவருக்கு அந்தத் தொழில்நுட்பத்தைப் படிக்க அரசு ஒரு லட்சத்திற்கும் மேல் செலவு செய்தது. இந்த வாய்ப்பு திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே கிடைத்தது. காரணம், நாங்கள் மட்டுமே ஃபிலிமில் புரொஜெக்ட் செய்யும் வசதியை அரசு ஏற்படுத்திக் கொடுத்திருந்ததுதான். ஆகவே, நாங்கள் படிப்பை முடித்ததும் உடனடியாகப் படத்தொகுப்பு பணிகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உடனடியாகக் கிடைத்தன."உயிரின் எடை 21 அயிரி' பட வாய்ப்பு எப்படி கிடைத்தது?"உயிரின் எடை 21 அயிரி' படத்தின் இயக்குநர் இந்திரஜித் என்னுடன் கல்லூரியில் படித்த மாணவர். இந்தப் படத்தின் பெரும்பாலான தொழில்நுட்பவாதிகள் என்னுடன் படித்தவர்களே. நாங்கள் கல்லூரியில் இறுதியாண்டு பயிற்சி படத்தில் ஒன்றாகப் பணியாற்றிருந்தோம். ஆகவே, எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது. இந்தப் படத்திற்கு நீதான் படத்தொகுப்பு செய்ய வேண்டும் அவர் கேட்டுக் கொண்டதும், மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக்கொண்டேன். தற்போது பல இடங்களிலிருந்து பட வாய்ப்பு வந்துகொண்டிருக்கிறது. என்னுடைய கனவுக்கு உயிர் கொடுத்த இந்திரஜித்துக்கு என்னுடைய நன்றியை இங்கே தெரிவிக்க ஆசைப்படுகிறேன்.நீங்கள் எந்தமாதிரியான தொழில்நுட்பத்தில் பணியாற்றுகிறீர்கள்?2004-ம் ஆண்டு வரை உதவி படத்தொகுப்பாளராகப் பணியாற்றும்போது "மூவியாலா' வில்தான் பணியாற்றினேன். அதற்குப் பிறகுதான் "ஆவிட்' போன்ற மென்பொருளைப் படித்தேன். தனியாகப் படத்தொகுப்பு செய்யும் வாய்ப்பு கிடைத்தபோதும் "ஆவிட்'டில்தான் பணியாற்றுகிறேன். திரைப்படப் படத்தொகுப்புப் பணிகளை செய்துகொண்டே தொலைக்காட்சியிலும் 24 மணி நேர செய்திப் பிரிவில் பணிபுரிகிறேன். செய்திப் பிரிவில் "ஆன்லைன் மிக்ஸிங்', "ஸ்பாட் அண்ட் லைவ் எடிட்டிங்' போன்ற வேலைகளைச் செய்கிறேன். உலகளவில் சிறந்த படத்தொகுப்பாளராக யாரைக் கருதுகிறீர்கள். தமிழ் சினிமாவில் படத்தொகுப்பாளர் ஆண்டனி பயன்படுத்தும் "ஃபாஸ்ட் கட்டிங்' (வேகமாக காட்சிகளை காட்டும் முறை) பற்றி உங்களது அபிப்ராயம் என்ன?கண்ணை உறுத்தாத எந்தப் படத்தொகுப்புமே சிறந்ததுதான். உலகளவில் மைக்கேல் கான், தெல்மா ஸ்கூன்மேக்கர், ரால்ஃப் டாஸன், பார்பரா மெக்லீன் போன்றவர்களை எனக்குப் பிடிக்கும். தியரிப்படி படத்தொகுப்பாளர் ஆண்டனி ("காக்க காக்க', "சிவாஜி', "எந்திரன்', "ஏழாம் அறிவு') தான் பணிபுரியும் படங்களின் படத்தொகுப்பில் கொடுக்கும் கட் எல்லாமே தவறானவைதான். அவர் படத்தொகுப்பு விதிகளை உடைத்துவிட்டு புதுவிதமான ஃபாஸ்ட் கட் என்னும் விதியை உருவாக்குகிறார். ஆனால், அது படத்தொகுப்பு விதியில் இடம்பெற்றிருக்கவில்லை. பாஸ்ட் கட் முறையை அவர் பயன்படுத்துவதால் அது படத்தில் தனித்து தெரிகிறது. அதன்மூலமும் படத்தின் பார்வையாளனும் அந்த இடத்தில் கதையில் ஒன்றாமல் அந்தத் தொழில்நுட்பத்தில் ஒன்றிவிடுகிறான். இது தியரிப்படி தவறானதுதான். ஆனால், ஒரு படத்தொகுப்பாளரை நோக்கிப் பார்வையாளனை ஆண்டனி நகர்த்தியிருப்பதால் அந்தத் தவறிலிருந்து அவர் தப்பித்துக் கொள்கிறார்.தமிழ் சினிமாவில் படத்தொகுப்பாளர் சுதந்திரமாக செயல்பட முடிகிறதா?தமிழ் சினிமாவில் படத்தொகுப்பாளருக்கு முக்கியத்துவமும், சுதந்திரமும் கொடுக்கப்படுவதேயில்லை. ஒரு இயக்குநர் தன்னுடைய திரைக்கதையில் என்ன எழுதியிருக்கிறாரோ அதை மட்டுமே படத்தொகுப்பில் செய்கிற ஒரு ஆபரேட்டிவ் படத்தொகுப்பாளராக இருப்பதைத்தான் பெரும்பாலான இயக்குநர்கள் விரும்புகிறார்கள். படத்தொகுப்பாளர் அந்தப் படத்தை இன்னும் தன்னுடைய கிரியேட்டிவிட்டியால் மிக உன்னதமான நிலைக்கு உயர்த்துவதற்குப் பெரும்பாலான இயக்குநர்கள் அனுமதிப்பதேயில்லை என்னும் நிலைதான் நீடிக்கிறது. அது மாறும் பட்சத்தில் ஒரு படத்தில் படத்தொகுப்பும் மிக மேன்மையான நிலையை அடையும்.

Thursday, March 10, 2011

வாழ்க காதல் எதிராளிகள்...!!

வாழ்க காதல் எதிராளிகள்...!!




தடுக்க படுவதால் மட்டுமே
அடக்க முடியாத சக்தியாக
வளர்கிறது காதல்..

ஆதரித்திருந்தால்
காதல் திசை இல்லாமல்
போயிருக்குமோ?


 காதல்...!!
இது  வளர்வது
ஆதரிப்பவர்களால் அல்ல..!
எதிர்ப்பவர்களால்..!!

வாழ்க காதல் எதிராளிகள்...!!


Monday, March 7, 2011

பெண்ணே சிறகை விறி..!!!


 நிச்சயம் வேண்டும் ஒரு நிர்ணயம்!!



உச்சித்தொட எண்ணிவிட்டால்
எச்சங்கள் மேலே
விழத்தான் செய்யும்..!

துச்சமென அதை தள்ளி விடு..!

நிச்சயம் வேண்டும் ஒரு நிர்ணயம்!!
நிலை மாறிவிட்டால் அது அந்நியம்...!

சந்திப்பதற்கும்

சிந்திப்பதற்கும்
சமயம் வந்துவிட்டால்,

நிந்திப்பாரின் பேச்சுக்கள்

சந்திக்கு சென்றுவிடும்..!
சொந்த பந்தங்கள் வந்தினிக்க
செய்து விடும்..!!


பெண்ணே சிறகை விறி...
உயரே பற...
எல்லைகள் உனக்கே தெரியும்..
வாழ்கையின் அர்த்தம் புரியும்...!!

மகளிர் தின வாழ்த்துக்கள்...!!!

Thursday, March 3, 2011

காஷ்மீர் - சில தகவல்கள் ...!!!! ...தொடர்ச்சி


 காஷ்மீர் - சில தகவல்கள் ...!!!!முதலாம் பாகத்தின் தொடர்ச்சி..
     அப்படி என்ன தாங்க நடக்குது காஷ்மீரில் ...?

இந்திய இராணுவத்தினர் காஷ்மீர் முஸ்லீம்களை அரக்கத்தனமாக கொடுமைப்படுத்துகிறார்கள் என்று பாகிஸ்தான் சொல்லுது.
பாகிஸ்தானியர்கள் குண்டுவடிப்பு, துப்பாக்கிசூடு  என்று காஷ்மீரிகளை தாக்குகிறார்கள் என்று இந்திய சொல்லுது.
எதை நம்புறது? ஆனால் ரெண்டுமே நடந்த்துட்டுதாங்க இருக்கு.

யாரோடவும் சேரமாட்டோம், தனி நாடினராத்தான் இருப்போம் ன்னு பிடிவாதமா இருக்கும் காஷ்மீர் மக்கள் தான் நடுவுல மாட்டிகிட்டு திண்டாடுறாங்க..

ஆனா அதே சமயம் ரெண்டு நாடுகள்கிட்டேஇருந்தும் கிடைக்குற சலுகைகளை அனுபவிக்கவும் தவறல...

ஒரு பக்கத்துல டூரிசம், ஆடல், பாடல், என்று கேளிக்கைகளும் நடதுட்டுதன் இருக்கு. இன்னொரு பக்கத்துல குண்டுவெடிப்பு, துப்பாக்கிசூடு, கலவரம் ன்னும் நடந்துட்டு தான் இருக்கு.

இந்த இடத்துல ஒரு யதார்த்த ஜோக்கு தான் ஞாபகம் தாங்க வருது.  ஒரு ஜோசியர் ஜோதிடம் பாக்க வந்தவரிடம் " இன்னும் மூணு மாசத்துக்கு உனக்கு கஷ்டம்தான்யா" சொன்னாராம். உடனே அவன் அதுக்கப்புறம் ன்னு கேட்டான். அதுக்கு ஜோசியர் " அதுவே பழகிடும் சொன்னாராம்.. அது போலத்தான் காஷ்மீர் மக்களின் நிலைமையும். அப்படியே பழகிடுச்சு.

இது இன்னைக்கு, நேத்து நடக்குற பிரச்னை இல்லைங்க.. காலம் காலமா நடதுட்டுதான்  இருக்கு.



காஷ்மீரின் வரலாற்றை சுருக்கமா பாப்போம் :

ஜம்மு காஷ்மீர் 3 பகுதிகளை கொண்டது.
1 . ஜம்மு
2 . காஷ்மீர்
3 . லடாக் (காஷ்மீர் பள்ளத்தாக்கு)

இதில் ஜம்முவில் முஸ்லிம்களும், காஷ்மீரில் இந்துக்களும், லடாக்கில் பௌத்தர்களும் அதிக அளவில் வாழ்கின்றனர்.

இவர்களுக்குள் பல நூற்றாண்டுகளாக கருத்து வேறுபாடு, சண்டைகள் இருந்து கொண்டேதான் இருக்கு.

முகலாயர்கள், மௌரியர்கள் என்று ஆட்சி மாறினாலும், இவர்களுக்குள் கருத்து பேதங்கள் தொடர்ந்துட்டுதான்
இருக்கு. ஆனால் அதை ஆட்சியாளர்கள் இன்றுவரை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொண்டிருக்கிறார்கள்.

ஊரார் ரெண்டு பட்டால் கூத்தாடிக்கு கொண்டாட்டம் என்ற கதை தான்..
இரண்டு தலைநகரங்களில் ஜம்மு கோடை காலத்திலும், ஸ்ரீநகர் குளிர் காலத்திலும் தலை நகரங்களாக செயல்படுகிறது.

ஆங்கிலேயர்களின் ஆட்சியின் போது, இங்கிலாந்தின் தட்பவெப்பநிலையை கொண்டிருந்ததால் ஆங்கிலேயர்களின் மனம் கவர்ந்த கோடை வாசஸ்தலமாக விளங்கியது.

1947 லில் சுதந்திரம் அறிவிக்கப்பட்டபோது, இந்தியா, பாகிஸ்தான் , வங்களாதேசம் , நேபாளம் என்று  ஒன்றிணைந்த இந்தியா துண்டு துண்டானது.

இதில் பாகிஸ்தான்   லிருந்து  வங்காளதேசம் பிரிந்ததும், அதற்கு இந்தியா உதவியதும் தனிக்கதை

இப்போது இந்தியாவை
துண்டு துண்டாக்க சீனா முயற்சி செய்வது தனிக்கதை.

இப்படி விவகாரமான எல்லையை பிரித்து காஷ்மீரை இந்தியாவுடன் சேர்த்துவிட்டு போய்விட்டது இங்கிலாந்து. காஷ்மீர் மட்டுமில்லைங்க வடகிழக்கு எல்லைகளான அஸ்ஸாம், நாகலாந்து, மணிப்பூர் என அனைத்தும் தனி நாடாக வேண்டும்னு இன்னும் போராடிகிட்டு தான் இருக்கு.

இங்கிலாந்து சுதந்திரத்தை மட்டுமில்லைங்க, இந்த மாதிரி பல உள்நாட்டு பிரச்சனைகளயும் தந்துட்டு போயிடுச்சு.  தெரியாம இல்லைங்க. தெரிஞ்சேதான். இதுதான் ராஜ தந்திரம், அரசியல் சூழ்ச்சி.

இதற்கு என்னதான் தீர்வு ன்னு கேக்குறீங்கள? 

மக்கள் கிட்ட கருத்து கேட்டு பெருபான்மை  படி தனி நாடாகவோ, இல்லை  அதன் விருப்படியோ பிரித்து கொடுக்கலாம்.   ஆனால்  கருத்து கேக்க எந்த நாடும் விரும்பலை. அதுக்கு அரசாங்கம் சொல்லும் பதில் ( அது எந்த கட்சி ஆட்சியாளர்களாக இருந்தாலும்)

1 .  எல்லையாக இருப்பதால் சீனா எளிதில் தன் வசபடுத்திவிடும்.
2 . அதன் மூலம் இந்தியாவிற்கு பல ஆபத்துக்கள் நேரிடும்.

இதுபோல பல அரசியல் ரீதியான காரணங்களை சொல்லிக்கொண்டே போகிறது அரசாங்கம்.



எந்த ஒரு மாற்றத்தையும் ஏற்படுத்தும் ஆற்றல் காலத்திற்கு மட்டுமே உண்டு.
அந்த காலம் தான் காஷ்மீர் மக்களின்  மனதில் தெளிவை ஏற்படுத்தி தங்கள் உரிமையை அமைதியான முறையில்
கேட்டு பெற வைக்க வேண்டும்...

காலத்தினால் மட்டுமே இதற்கு ஒரு தீர்வு கிடைக்கும்....!!!!


Wednesday, February 23, 2011

காஷ்மீர் - சில தகவல்கள் ...!!!!

காஷ்மீர் - சில தகவல்கள் ...!!!!


      * காண்பவர்களை தன் அழகால் தன் வசம் ஈர்க்கும் அழகிய  பனி சூழ்  மாநிலம் காஷ்மீர்.. சுற்றுலா பயணிகளின் உள்ளம் கவர்ந்த வாசஸ்தலம்.  இந்தியாவின் சுவிட்சர்லாந்து என்றெல்லாம் வருணிக்கப்படும் காஷ்மீர் இன்னும் பல தனி சிறப்புகளை பெற்ற மாநிலமாக இருக்கிறது. ஆனால் அது இந்தியாவின் ஒரு மாநிலமாக தன்னை அங்கீகரித்து கொண்டதா என்பதுதான் கேள்விக்குறி.....


காஷ்மீரின் சிறப்புகள் :
* இரண்டு தலை நகரங்களை கொண்ட ஒரே மாநிலம் காஷ்மீர்...

* தனகென்று தனி தேசிய கொடியை கொண்ட ஒரே மாநிலம்...

* அம்மாநில மக்கள் அனைவரும் இரட்டை குடிஉரிமை பெற்றவர்கள்...

* காஷ்மீரிகள் அல்லாத எவரும் ஒரு அடி நிலத்தை கூட அங்கு  வாங்க முடியாது...

* அம்மாநில  மக்களுக்கு சொத்துவரியோ, நில வரியோ கிடையாது...

* அங்குள்ள பெண் வேறு மாநிலத்தை சேர்ந்த ஒருவரை திருமணம்  செய்துகொண்டால் உடனடியாக
   அவளது குடிஉரிமை ரத்து செய்யப்படும்...  

* அரிசி, கோதுமை, எண்ணெய்,  சக்கரை போன்றவற்றின் விலை 50 வருடங்களுக்கு  முன்பிருந்த   
  விலைவாசியில்தான் கிடைக்கிறது... 
 
*இதனால் மட்டுமே ஆண்டிற்கு சுமார் 1000 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது...

* அம்மாநிலத்திற்கென்று தனி சட்டம் சிலவும் உண்டு. பொது அரசியல் சட்டங்கள் அவற்றிற்கு பொருந்தாது...

* இதன்படி, இந்திய பாராளுமன்றத்தில் இராணுவம், தகவல் தொடர்பு, வெளியுறவு விவகாரம், ஆகிய துறைகளை தவிர்த்து மற்ற துறைகளில் இயற்றப்படும் எந்த சட்டமும் காசுமீர் சட்டசபையின் ஒப்புதல் இன்றி ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் செல்லாது...

*ஜம்மு  காஷ்மீர்  மாநிலத்தில் இந்திய உச்ச நீதி மன்றத்தின் ஆளுகையும் உள்ளது.

*மேலும் இந்திய மாநிலங்களில் சம்மு காசுமீர் மாநிலத்தில் மட்டுமே  தனி அரசியல் சாசனம் உண்டு.

என்ன வியப்பாக இருக்கிறதா?

இதனை சலுகைகளையும் அம்மாநிலத்திற்கு மட்டும் இந்திய அரசு அளித்து வருகிறது
என்றால் அது ஏன் தெரியுமா ?

அதே சமயத்தில்  அங்கு தினம் தினம் கலவரம், குண்டுவெடிப்பு , கடை அடைப்புகள் , அடிக்கடி 144 சட்டம் பிரயோகிப்பு , எப்போதும் ராணுவத்தின் ரோந்து பணி இவையும் நடக்கிறதே அது  எதனால் தெரியுமா?

ஒரேயொரு முறையேனும் அங்கு என்ன நடக்கிறது என்று யோசித்து இருக்கிறோமா நம்மில் சிலரைத் தவிர?

இத்தனையும் காஷ்மீரை  தன் வசம் இழுக்கத்தான்....

சலுகைகளும் அதற்காகத்தான் , சண்டைகளும்  அதற்காகத்தான்...

அப்படி என்றால் அது இந்திய மாநிலங்களுக்குள் ஒன்று இல்லையா என்று கேக்குகீறீங்களா ?

நாமதாங்க சொல்லிக்கொண்டு இருக்கிறோம் காஷ்மீர் இந்தியாவின் ஒரு பகுதி என்று, அங்கு வாழும் மக்கள் நாங்கள் பாகிஸ்தானியர்களோ , இந்தியர்களோ இல்லை நாங்கள் காஷ்மீரிகள், நாங்கள் தனி நாட்டினர் என்றுதான் சொல்லிக்கொள்கிறார்கள்.

முஸ்லிம்கள் ஆனாலும் நாங்கள் காஷ்மீரிகள், இந்துக்கள் ஆனாலும் நாங்கள் காஷ்மீரிகள், பௌத்தர்கள் ஆனாலும் நாங்கள் காஷ்மீரிகள், மதங்கள் எதுவானாலும் நாங்கள் காஷ்மீரிகள் என்றுதான் சொல்லிக்கொள்கிறார்கள்.


இந்திய இராணுவத்தினர் காஷ்மீர் முஸ்லீம்களை அரக்கத்தனமாக கொடுமைப்படுத்துகிறார்கள் என்று பாகிஸ்தான் சொல்லுது.
பாகிஸ்தானியர்கள் குண்டுவடிப்பு, துப்பாக்கிசூடு  என்று காஷ்மீரிகளை தாக்குகிறார்கள் என்று இந்திய சொல்லுது.


  அப்படி என்ன தாங்க நடக்குது காஷ்மீரில் ...?????
                                                              
                                                                                                                            -- தொடரும்....
என் அன்பான பதிவுலக  நண்பர்களுக்கு வணக்கங்கள்..  இதுவரை வெளியாளாக இருந்து உங்கள் எழுதுக்களை படித்த நான் உங்களுள் ஒருத்தியாக நுழைகிறேன். நாம்மளும் எழுதி பாப்போமேன்னு முயற்சி எடுத்துருக்கேன்..
எப்படியாவது என்னிடம் தெரிஞ்சோ தெரியாமலோ ஒட்டிகொண்டிருக்கும் அறிவை தேடி  கண்டுபிடித்து என்னை எப்படியாவது  அறிவாளியாக்கிவிட முயற்சி செய்து கொண்டிருக்கும் என் ஆசானை வணங்கி எழுத தொடங்குகிறேன்..