Friday, December 16, 2011

My interview on magazines.. தமிழ் சினிமாவின் முதல் பெண் படத்தொகுப்பாளர்!


தமிழ் சினிமாவின் முதல் பெண் படத்தொகுப்பாளர்!

இயக்குநர் பாரதிராஜாவின் ஆஸ்தான படத்தொகுப்பாளரும், "வேதம் புதிது' படத்திற்கு தேசிய விருது வாங்கியவருமான பி. மோகன்ராஜிடம் உதவி படத்தொகுப்பாளராகப் பணிபுரிந்தவர் கிருத்திகா. சென்னை-தரமணி திரைப்படக் கல்லூரியில் "படத்தொகுப்பு' பிரிவு மாணவியான இவர், சமீபத்தில் "உயிரின் எடை 21 அயிரி' படத்தின் மூலமாக முதல் பெண் படத்தொகுப்பாளராக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்பட்டிருக்கிறார்.படத்தொகுப்பாளராக தமிழ் சினிமாவில் அடையாளம் காணப்பட்டிருக்கிறீர்கள். அது பற்றி கொஞ்சம் சொல்லுங்கள்...1999-ம் ஆண்டு திரைப்படக் கல்லூரியிலிருந்து வெளியே வந்ததும் படத்தொகுப்பாளராக சினிமாவில் அடையாளம் காணப்பட வேண்டும் என்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டேன். என்னுடைய முயற்சிக்கு முதல் வெற்றி வாய்ப்பாக ஒரு தனியார் தொலைக்காட்சியில் படத்தொகுப்பாளராகப் பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால் என்னுடைய பத்து வருட கனவு இப்போதுதான் நிறைவேறியிருக்கிறது. கல்லூரியில் படித்த காலங்களில் என்னுடைய துறைப் பேராசிரியர், ""இந்தத் தொழில்நுட்பத்தைப் படித்துவிட்டு பெரும்பாலும் தொலைக்காட்சியில்தான் பெண்கள் பணியாற்றுகிறார்கள். நீங்கள் தொலைக்காட்சியோடு, சினிமாவிலும் பணியாற்ற வேண்டும். அதைத்தான் ஒரு பேராசிரியராக நான் உங்களிடம் எதிர்பார்க்கிறேன்'' என்று சொன்னார். அவருடைய கனவை நான் இப்போது நிறைவேற்றியிருப்பதாக நினைக்கிறேன். கல்லூரியில் பயிலும்போது படத்தொகுப்பில் எந்த மாதிரியான மென்பொருளை பயன்படுத்தினீர்கள்?"மூவியாலா ஸ்டீரிம்பேக்'ல்தான் படத்தொகுப்பைக் கற்றுக்கொண்டேன். ஆனால், கல்லூரியில் இறுதியாண்டில்தான் "நான் லீனியர் எடிட்டிங்' வந்தது. அப்போது அந்த மென்பொருளை எங்கள் கல்லூரியில் படிக்கும் வசதியில்லாமல் இருந்தது. ஆனால், "மூவியாலா'வில் படத்தொகுப்பை கற்றுக்கொள்வதற்குண்டான அனைத்து வசதிகளும் எங்கள் கல்லூரியில் கிடைத்தது. ஏறக்குறைய ஒரு மாணவருக்கு அந்தத் தொழில்நுட்பத்தைப் படிக்க அரசு ஒரு லட்சத்திற்கும் மேல் செலவு செய்தது. இந்த வாய்ப்பு திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு மட்டுமே கிடைத்தது. காரணம், நாங்கள் மட்டுமே ஃபிலிமில் புரொஜெக்ட் செய்யும் வசதியை அரசு ஏற்படுத்திக் கொடுத்திருந்ததுதான். ஆகவே, நாங்கள் படிப்பை முடித்ததும் உடனடியாகப் படத்தொகுப்பு பணிகளில் ஈடுபடுவதற்கு வாய்ப்புகள் உடனடியாகக் கிடைத்தன."உயிரின் எடை 21 அயிரி' பட வாய்ப்பு எப்படி கிடைத்தது?"உயிரின் எடை 21 அயிரி' படத்தின் இயக்குநர் இந்திரஜித் என்னுடன் கல்லூரியில் படித்த மாணவர். இந்தப் படத்தின் பெரும்பாலான தொழில்நுட்பவாதிகள் என்னுடன் படித்தவர்களே. நாங்கள் கல்லூரியில் இறுதியாண்டு பயிற்சி படத்தில் ஒன்றாகப் பணியாற்றிருந்தோம். ஆகவே, எங்களுக்குள் நல்ல புரிதல் இருந்தது. இந்தப் படத்திற்கு நீதான் படத்தொகுப்பு செய்ய வேண்டும் அவர் கேட்டுக் கொண்டதும், மறுப்பேதும் சொல்லாமல் ஒப்புக்கொண்டேன். தற்போது பல இடங்களிலிருந்து பட வாய்ப்பு வந்துகொண்டிருக்கிறது. என்னுடைய கனவுக்கு உயிர் கொடுத்த இந்திரஜித்துக்கு என்னுடைய நன்றியை இங்கே தெரிவிக்க ஆசைப்படுகிறேன்.நீங்கள் எந்தமாதிரியான தொழில்நுட்பத்தில் பணியாற்றுகிறீர்கள்?2004-ம் ஆண்டு வரை உதவி படத்தொகுப்பாளராகப் பணியாற்றும்போது "மூவியாலா' வில்தான் பணியாற்றினேன். அதற்குப் பிறகுதான் "ஆவிட்' போன்ற மென்பொருளைப் படித்தேன். தனியாகப் படத்தொகுப்பு செய்யும் வாய்ப்பு கிடைத்தபோதும் "ஆவிட்'டில்தான் பணியாற்றுகிறேன். திரைப்படப் படத்தொகுப்புப் பணிகளை செய்துகொண்டே தொலைக்காட்சியிலும் 24 மணி நேர செய்திப் பிரிவில் பணிபுரிகிறேன். செய்திப் பிரிவில் "ஆன்லைன் மிக்ஸிங்', "ஸ்பாட் அண்ட் லைவ் எடிட்டிங்' போன்ற வேலைகளைச் செய்கிறேன். உலகளவில் சிறந்த படத்தொகுப்பாளராக யாரைக் கருதுகிறீர்கள். தமிழ் சினிமாவில் படத்தொகுப்பாளர் ஆண்டனி பயன்படுத்தும் "ஃபாஸ்ட் கட்டிங்' (வேகமாக காட்சிகளை காட்டும் முறை) பற்றி உங்களது அபிப்ராயம் என்ன?கண்ணை உறுத்தாத எந்தப் படத்தொகுப்புமே சிறந்ததுதான். உலகளவில் மைக்கேல் கான், தெல்மா ஸ்கூன்மேக்கர், ரால்ஃப் டாஸன், பார்பரா மெக்லீன் போன்றவர்களை எனக்குப் பிடிக்கும். தியரிப்படி படத்தொகுப்பாளர் ஆண்டனி ("காக்க காக்க', "சிவாஜி', "எந்திரன்', "ஏழாம் அறிவு') தான் பணிபுரியும் படங்களின் படத்தொகுப்பில் கொடுக்கும் கட் எல்லாமே தவறானவைதான். அவர் படத்தொகுப்பு விதிகளை உடைத்துவிட்டு புதுவிதமான ஃபாஸ்ட் கட் என்னும் விதியை உருவாக்குகிறார். ஆனால், அது படத்தொகுப்பு விதியில் இடம்பெற்றிருக்கவில்லை. பாஸ்ட் கட் முறையை அவர் பயன்படுத்துவதால் அது படத்தில் தனித்து தெரிகிறது. அதன்மூலமும் படத்தின் பார்வையாளனும் அந்த இடத்தில் கதையில் ஒன்றாமல் அந்தத் தொழில்நுட்பத்தில் ஒன்றிவிடுகிறான். இது தியரிப்படி தவறானதுதான். ஆனால், ஒரு படத்தொகுப்பாளரை நோக்கிப் பார்வையாளனை ஆண்டனி நகர்த்தியிருப்பதால் அந்தத் தவறிலிருந்து அவர் தப்பித்துக் கொள்கிறார்.தமிழ் சினிமாவில் படத்தொகுப்பாளர் சுதந்திரமாக செயல்பட முடிகிறதா?தமிழ் சினிமாவில் படத்தொகுப்பாளருக்கு முக்கியத்துவமும், சுதந்திரமும் கொடுக்கப்படுவதேயில்லை. ஒரு இயக்குநர் தன்னுடைய திரைக்கதையில் என்ன எழுதியிருக்கிறாரோ அதை மட்டுமே படத்தொகுப்பில் செய்கிற ஒரு ஆபரேட்டிவ் படத்தொகுப்பாளராக இருப்பதைத்தான் பெரும்பாலான இயக்குநர்கள் விரும்புகிறார்கள். படத்தொகுப்பாளர் அந்தப் படத்தை இன்னும் தன்னுடைய கிரியேட்டிவிட்டியால் மிக உன்னதமான நிலைக்கு உயர்த்துவதற்குப் பெரும்பாலான இயக்குநர்கள் அனுமதிப்பதேயில்லை என்னும் நிலைதான் நீடிக்கிறது. அது மாறும் பட்சத்தில் ஒரு படத்தில் படத்தொகுப்பும் மிக மேன்மையான நிலையை அடையும்.

No comments:

Post a Comment